என் கணங்கள்
காத்திருக்கிறோம் வழக்கம்போல்
பேருந்துக்காய் நீயும் உனக்காய் நானும்
நேரம் பார்க்கிறாய்
கருவிழி உருட்டி சாலையின் ஓரம் பார்க்கிறாய்
காது மடல் வருடி காதணி சரிபார்க்கிறாய்
கருங்கூந்தல் கோதி காற்றில் கலக்கிறாய்
கைவளையல் எத்தனை என்று எண்ணிப்பார்க்கிறாய்
அதை உன் கணுக்கையின் கடைசி மட்டும் தள்ளிப்பார்க்கிறாய்
கழுத்தின் மெல்லிய சங்கிலிதன்னை கடித்துப்பார்க்கிறாய்
இரு விரல்களால் அதை விலங்கிட்டுப் பின் விடுதலை செய்கிறாய்
காற்றில் கலைந்த மேலாடையை கவனிக்கமறுக்கிறாய்
சிலர் பார்வையின் பாரம் பட்டுணர்ந்து அதை திருத்தி வைக்கிறாய்
பாதம் மட்டும் சிறிதாய் தூக்கி பரதம் பயில்கிறாய்
நீ பார்த்த பேருந்து வந்ததும் ஏறி என் விரதம் முடிக்கிறாய்
பெண்ணே, எதற்கோவான உன் அசைவுகளையெல்லாம்
நிதம் நான் பார்க்கிறேன்
உனக்கு மட்டுமேயான என் அசைவை எப்போது நீ பார்ப்பாய்...?
